மட்டக்களப்பு மாநகரசபையின் 65வது சபை அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், முதல்வரின் சிபாரிசுகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், நீண்டகால குத்தகை விடயங்கள், மாநகர சபையில் உள்ள இரும்புக் கம்பிகளை விற்பனை செய்வதற்கான விலை நிர்ணயம் மற்றும் அனுமதி, உரிமையாளர் உயிருடன் இல்லாத பொதுச்சந்தை ஆயுள் குத்தகைக் கடைகளை மீளப் பொறுப்பேற்று கேள்வி கோரி வழங்குவது போன்ற விடயங்கள் ஆரயப்பட்டது.
அத்துடன் தாமதமாகுகின்ற மட்டக்களப்பு நூலக வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு மாநகரசபையூடாக மேலும் 145 மில்லியன் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான மாநரசபை அனுமதிக்கான பிரேரணையும் மாநகர முதல்வரால் முன்வைக்கப்பட்டதுடன் வெபர் மைதானத்தில் வெளிமாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் வந்து தங்கி நிற்பதற்கான விடுதி அமைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜால்; தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டு சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
அத்துடன் வெபர் மைதானத்தில் நிலவுவகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒருநாள் வேலைத்திட்டம் என்னும் அடிப்படையில் மாநகர பிரதி ஆணையாளர் மற்றும் விளையாட்டுக் குழுவின் தலைமையில் குழுவொன்று நியமித்து அன்றைய தினம் அனைத்து வித குறைபாடுகள் தொடர்பிலும் ஒரு திட்டத்தினை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையின் பாதுகாப்பு கருதி வாயிற் கதவு அமைத்தல், இறுதிக்கிரியை மேற்கொள்வதற்கான பீடம் அமைத்தல் என்பன தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் இரா.அசோக் தனிநபர் பிரேரணை முன்வைக்க அது சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இறுதியில் மாநகரசபையின் வேலைப்பகுதியின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக உறுப்;பினர்;களால் மாநகரசபையின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
மாநகரசபையினால் மேற்கொள்ளப்படும் செயற்;திட்டங்கள் அனைத்தும் வேலைக் குழுவின் முழுக் கண்காணிப்பின் கீழ் அக் குழுவினால் நிரற்படுத்தப்பட்டு ஒரு ஒழுங்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.