மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டியும், அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறும் மகஜர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரதிநிதிகளிடமும் இன்று கையளிக்கப்பட்டன.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் இன்று
அம்பாறை மாவட்ட மீனவ பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின்போதே குறித்த மகஜர்கள் கையளிக்கப்பட்டன. தேசிய மீனவர் பேரவையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் அமீர், பாராளுமன்ற உறுப்பினர் முசாரப்பின் இணைப்பாளர் அறூஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதி எஸ்.எம்.சபீஸ், தேசிய மீனவ தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.கே.ஜமால்தீன், நெப்சோ நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்ட மீனவ சமுதாயம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முறையற்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள மீனவ சட்டத்தை மாற்றுதல் கடல் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதனை தடை செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.