முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு 2 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப இயந்திரம் ஒன்றினை, முள்ளியவளை கொமஷல் வங்கி கிளை அன்பளிப்பு செய்துள்ளது. மாவட்ட மருத்துவமனைக்கு மிகவும் முக்கிய தேவையான குறித்த இயந்திரம் கொமஷல் வங்கி முள்ளிவளை கிளையின் சமூக பொறுப்பு நிதியத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் ரூபா பெறுமதியான மையவிலக்கு சுழற்கி இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர்கள், கொமஷல் வங்கி முள்ளியவளை கிளையின் முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கொமஷல் வங்கியினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது வைத்தியசாலையின் அபிவிருத்திகளுக்கோ இயந்திர கொள்வனவுக்கோ நிதிகள் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுவதில்லை எனவும், நன்கொடையாளர்களின் அன்பளிப்புக்களையும் நிதி உதவிகளையும் வைத்து மக்களுக்கு சேவை வழங்கிவருவதாகவும் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.