மேட்டுவட்டை குடியிருப்பாளர்களுக்கான
மையவாடி அமைக்க தீர்மானம்

0
241

கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருப்பதுடன் இவர்களுக்கான மையவாடி குறித்து
மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் இதனை வழிமொழிந்து உரையாற்றினார். குறித்த சுனாமி வீட்டுத்திட்டங்களில் வாழ்கின்ற மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மையவாடியை அவர்களது நலன் கருதி அப்பகுதியிலேயே ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகுமென இதன்போது வலியுறுத்தபட்டது.

அத்துடன் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் விலங்கறுமனைகளை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காணிகளை கல்முனை மாநகர சபைக்கு விடுவித்து தருமாறு பிரதேச செயலாளரைக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவை தவிர மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்த விவாதங்களும் இடம்பெற்றன. அத்துடன் உறுப்பினர்களின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கும் முதல்வரினால் பதில்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.அதுபோல் கல்முனை மாநகர சபையின் மறைந்த உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்திக்கும் இதன்போது 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.