மே தின விசேட போக்குவரத்து திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

0
3

மே தினத்தன்று அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், உரிய அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமையகம் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இம்முறை மே தினத்தன்று கொழும்பில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் காலி முகத்திடல், பீ.டி.சிறிசேன மைதானம், அஞ்சல் திணைக்கள தலைமையகம், ஹயிட்பார்க் மைதானம், விகாரமகாதேவி பூங்கா,லலித் அத்துலத்முதலி மைதானம், புனித மைக்கல் தேவாலயம், கொழும்பு நகர சபை மண்டபம் ஆகிய பகுதிகளில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள், பேரணிகள் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக ஏதேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், சாரதிகள் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், கொழும்பு மாவட்டத்துக்கு வெளியில் தலவாக்கலையில் பிரதான மே தினம் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.