கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டுடன் இணைந்த சர்வதேச தலைமைத்துவ மாநாட்டில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்றுத் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு சமாதானத்திற்கான சர்வதேச உச்சி மாநாட்டுப் பேரவையின் தலைமைத்துவம் வழங்கப்பட்டது.
உலக அமைதிக்காக 1987 இல் தென் கொரியாவில் நிறுவப்பட்ட உலக அமைதி மாநாட்டு கவுன்சில், 2019 இல் நடைபெற்ற உலக அமைதி உச்சி மாநாட்டிற்குப் பிறகு சர்வதேச அமைதிக்கான மாநாட்டு கவுன்சிலாக அறிவிக்கப்பட்டதோடு ஜனநாயகம், நிலையான மனித மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதியை அதன் முக்கிய குறிக்கோள்களாக அடையாளம் கண்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 110 நாடுகளைச் சேர்ந்த அரசாங்கத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த மாநாட்டில் உறுப்பினர்களாக உள்ளனர்.
உலக அமைதி மாநாடு தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கவுன்சிலுக்கு சமமாக கருதப்படுகிறது.
அதன் தலைமையகம் தென் கொரியாவின் சியோலிலும் அதன் சர்வதேச செயலகம் அமெரிக்காவின் நியூயார்க்கிலும் அமைந்துள்ளன.
சர்வதேச சமாதான உச்சி மாநாட்டு பேரவையின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் பெருமளவான உலகத் தலைவர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.