அகில இலங்கை சைவ மகா சபையால் வலிகாமம் மற்றும் தீவக கல்வி வலயங்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தரம் 8 மற்றும் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இளம் சிவதொண்டர் வதிவிட பயிற்சி நெறி இன்று காலை ஆரம்பமானது.
அகில இலங்கை சைவ மகாசபையின் பொது செயலாளர் மருத்துவர் பரா நந்தகுமார் தலைமையில் பயிற்சி நெறி ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக சைவ மாகாசபையின் கீதம் இசைக்கபட்டு சைவத்திற்கும் தமிழிற்குமாக உயிர்நீத்த உறுவுகளிற்கு அகவணக்கம் செலுத்தி நந்திகொடியேற்றி, பயிற்சி பட்டறை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
2025 ஆண்டில் இந்த மாணவர்கள் மூலம் பாடசாலை சிவதொண்டர் அணியை உருவாக்கி, மாணவர்களை போதையற்ற நேர் சிந்தையுடைய ஆன்மீகம் சார் அறம்சார் எதிர்கால தலைமைத்துவ விருத்திக்கான பாடசாலை மட்ட செயற்பாடுகளில் பங்கெடுக்க வைப்பதே குறித்த பயிற்சிப் பட்டறையின் எதிர்பார்ப்பாகும்.
ஆன்மீகம், சிவபூசை தலைமைத்துவம், வாழ்க்கைதேர்ச்சி, குழு செயற்பாடு, அனர்த்த முகாமை, சிவதொண்டர்அமைப்பு, சமய தீட்சை, பாதயாத்திரை, இயக்கவியல் யோகாசனம், பண்ணிசை என பல்நோக்கில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் தமிழ் சைவ பேரவையின் பொது செயலாளர் எஸ்.சிவரூபன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொருளாளர் அருள் சிவானந்தன், வலிகாமம் கல்வி வலயத்தின் ஆசிரிய வள நிலைய பொறுப்பாசிரியரும், தெல்லிப்பழை துர்காதேவி அறநெறி பாடசாலையின் அதிபருமான விஜகுமாரி முருகேசம்பிள்ளை மற்றும் வளவாளர்கள், மாணவர்கள், சிவதொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் திங்கட்கிழமைவரை பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வங்கி வைக்கப்படவுள்ளன.