ஆட்களற்ற நேரம் பார்த்து, பட்டப்பகல் வேளை, ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து, மூன்றே முக்கால் பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேக நபர்கள், பருத்தித்துறை பொலிஸாரால், ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று, புலோலி, காந்தியூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலையில், வீட்டார் வெளியில் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி, வீட்டின் பின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த ஒரு காப்பு, ஒரு சங்கிலி, ஒரு கைச்சங்கிலி, ஒரு நெக்லஸ் அடங்கலாக, மூன்றே முக்கால் பவுண் நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களையும் திருடிச் சென்றனர்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில், பொலிஸார், திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில், பதில் பொறுப்பதிகாரி சேந்தன் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.