யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் கைது

0
109

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில், நேற்று (15) இரவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கடற்படையினர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடற்கரையோரங்களில் சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், கடற்கரையை உள்ளடக்கி கடற்கரையோர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைவாகவே நேற்று இரவு குறித்த பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்துக்கு இடமாக பயணித்த இந்திய படகை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு உரப்பையில் பொதியிடப்பட்டிருந்த 62 கிலோகிராம் 400 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் மூவரை கைதுசெய்துள்ளனர்.