யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையில் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
திருநெல்வேலி சந்தையில், செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருந்த வேளை, விசாரணை செய்யப்பட்டார்.
இவர், வேறொரு இடத்தில் கசிப்பை வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் உதவியுடன், கோப்பாய் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட வேளை, ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், 19 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.