யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 3 ஆவது காலாண்டு குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 3 ஆவது காலாண்டு குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உதயபுரம் மணியந்தோட்டத்திலிருந்து நகர்புற பாடசாலைக்கு வரும் மாணவர்களின் நன்மை கருதி, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவையினை பாடசாலை விடுமுறை முடிந்து தொடங்கும் நாளிலிருந்து காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பதில் அரசாங்க அதிபர், குறித்த சேவையானது 7.45க்கு யாழ் நகரை வந்தடையும் எனவும் பிற்பகல் 1.10க்கு யாழ் நகரிலிருந்து 2.15க்கு மணியந்தோட்டம் உதயபுரத்தை சென்றடைய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் போது அதிபர் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்காது ஒழுக்காற்று குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதனை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதுவரை சிறுவர்களுக்கான பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதிவு செய்யாதவர்களுக்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் அரச அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார்.
பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த பதில் அரச அதிபர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இக் கலந்துரையாடலில் மாகாண நன்னடத்தை பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.