யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கிழக்கில் இருக்க இடமின்றி வாழும் மக்கள்

0
424

செல்வந்தர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கும்போது யுத்ததினால் பாதிக்கப்பட்டு இருக்க இடமின்றி பெருமளவான தமிழ் மக்கள் கிழக்கில் வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு,ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலம்பாவெளியில் காணியற்ற மக்கள் அருகில் உள்ள சவுக்கடி பகுதியில் அரச காணியில் குடியேற முற்பட்டபோது குறித்த நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் நேற்று மாலை அப்பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இதன்போது குறித்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியற்ற நிலையில் உள்ளதாகவும் நீண்டகாலமாக தமக்கு காணி வழங்குமாறு கோரிய நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அரசியல்வாதிகள், இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுசென்ற நிலையில் தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதேச செயலகத்தால் தங்களை அப்பகுதியிலிருந்து செல்லுமாறு பொலிஸாரைக்கொண்டு விரட்டியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணிகளற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்காது செல்வந்தர்களுக்கு இப்பகுதிகளில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.