யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

0
9

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது. 

பின்னர் இரு பிரதிவாதிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த வழக்குக்கு இணையான மற்றொரு வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் நீதிமன்றம் இலக்கம் 1 இல் அழைக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அந்த வழக்கின் ஆவணங்களும் இந்த வழக்கின் ஆவணங்களும் ஒன்றே என்பதை சுட்டிக்காட்டிய அரசு சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தனக்குத் தெரிவிக்குமாறு பிரதிவாதிகள் சட்டத்தரணிகளிடம் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மற்றும் அனில் சில்வா ஆகியோர், தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்து, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக தெரிவித்தனர். 

பின்னர் வழக்கை ஓகஸ்ட்மாதம் 4 ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மற்றும், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாயிக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால்  மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.