ராஜிதவின் முன்பிணை மனு மீது எதிர்வரும் 30இல் விசாரணை

0
4

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னை கைது செய்யத் தயாராகி வருவதால், அவ்வாறு தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனக்கு முன் பிணை அளிக்ககோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக்கா காலிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் இந்த மனு எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இருநூறு மில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம்  தொடர்பாக தான் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன் பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் அக்கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி நிராகரித்தது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க பிறப்பித்திருந்தார்.

இதற்கமைய இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக்கா காலிங்க முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. மனுதாரர் ஏற்கனவே தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனக்கு முன் பிணை அளிக்ககோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றமத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதுடன்  அது நிரகாரிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தத் தீர்ப்பின் பிரதியை மனுதாரர் நீதிமன்றத்தில் சமர்பிக்க தவறியமையால் இந்த மனு மீதான உத்தரவொன்றை தம்மால் பிறப்பிக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே இந்த முன் பிணை கோரிக்கை மனுவின் தீர்ப்பு அடங்கிய பிரதியை மன்றில் சமர்பித்து ஆராய்ந்தன் பின்னர் உத்தரவொன்றை பிறப்பிப்பதாக நீதிபதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகளிடம்  குறிப்பிட்டார். இதற்கமைய இந்த மனு எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.