வடக்கு மாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு, முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன், 34வது நினைவுகூரல் நிகழ்வு நேற்றைய தினம், யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.
கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் ‘இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் – வடக்கு முஸ்லிம் மக்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கௌரவ விருந்தினர்களாக மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் யாழ் கதீஜா மகாவித்தியாலய அதிபர் ஜனாபா ஏ.சி.ஜென்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.