வவுனியாவில் காட்டு யானையை மோதிய வாகனம்!

0
25

வவுனியாவில் காட்டு யானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானை படுகாயமடைந்தது.

இந்தச் சம்பவம் மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது.

நேற்று இரவு மன்னார் பகுதியிலிருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றிச்சென்ற கூலர் ரக வாகனம் பிரதான வீதியில் நின்ற காட்டு யானையுடன் மோதியது.

இதனால் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார். இதேவேளை, வாகனத்தில் அடிபட்ட யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு சிகிச்சையளிக்கும் செயல்பாடுகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.