வவுனியா வெடுக்குநாறிமலையில் சேதமாக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை

0
183

வவுனியா வெடுக்குநாறிமலையில், அண்மையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், இன்று, விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டன.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள், கடந்த மாதம், இனந்தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டதுடன், சிலைகளும் காணாமல் ஆக்கப்பட்டன.

அதனையடுத்து, ஆலயத்தில் மீண்டும் விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்யும் ஏற்பாடுகள், பல தரப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற வழக்கை காரணம்காட்டி, தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார், அதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு, வவுனியா நீதிமன்றில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்ததுடன், ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு, நீதின்றம் அனுமதி வழங்கியது.

உடைக்கப்பட்ட விக்கிரகங்களை, அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கும், நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

அதனையடுத்து, இன்று காலை, சுபநேரத்தில், உடைக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் மீண்டும் வைக்கப்பட்டன.

பல சிரமங்களுக்கு மத்தியில், புதிய விக்கிரகங்கள், மலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டன.

இதில், ஆலய நிர்வாகத்தினர், பூசாரியார், சமூக ஆர்வலர்கள், வேலன் சுவாமிகள், அகஸ்தியர் சுவாமிகள், அரசியல் தரப்பினர், இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.