இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாhட.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன.
குறிப்பாக 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன் மொத்தமாக 709 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,160 பாரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
அத்துடன் 3,201 சிறு விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக உயிரிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே அதிகளவில் அடங்கியுள்ளனர்.
உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவர்.
அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனர். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களால் ஏற்படுகின்றன.
இரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படுகின்றன.
இதனால் வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தெரியவந்துள்ளது.
எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.