நாட்டிற்கு பெருந்தொகையான அந்நியச் செலாவணியை ஏற்படுத்திக் கொடுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண காரியாலயம் மட்டக்களப்பில் அமைக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 24.02.2022 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கொழும்புத் தலைமைக் காரியாலயத்தின் தவிசாளர் உடனான சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்தோடு வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடிச் செல்கின்ற இளைஞர் யுவதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது கொழும்பிற்கு சென்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய சூழல் இருக்கின்றது.
அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண இளைஞர்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அமையமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்கின்ற இளைஞர் யுவதிகள் துரதிஷ்டவசமாக மரணங்கள் மற்றும் அசௌகரியங்கள் உள்ளாகின்ற போது அவற்றினை இலகுவாக தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறையும் அமைக்கப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.