வைத்தியசாலை கழிவறையில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்த மாணவி!

0
6

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், தாம் பிரசவித்த குழந்தையை யுவதி ஒருவர் கழிப்பறையின் ஜன்னல் ஊடாக எறிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயர் தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3.20 அளவில் தாம் கர்ப்பிணி என்பதை தெரிவிக்காமல் வயிற்றுவலி எனக்கூறி சிகிச்சை பெறுவதற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, அதிகாலை 5 மணியளில் குறித்த யுவதி கழிப்பறைக்குச் சென்றபோது, குழந்தையைப் பிரசவித்துள்ள நிலையில் பின்னர் ஜன்னல் ஊடாக குழந்தையை எறிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், குழந்தை ஜன்னலில் கீழ் உள்ள தளம் ஒன்றில் வீழ்ந்துள்ள நிலையில் அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட குழந்தை முதிரா குழந்தைகளுக்கான விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த யுவதி வைத்தியசாலையின் 31 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.