வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சந்தித்த வடிவேல் சுரேஷ் எம்.பி

0
91

பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷுக்கும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகஸ்தர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் ராஜகிரியவில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது நாட்டில் விசேட வைத்திய நிபுணர்களின் வீழ்ச்சி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது

குறித்த சந்திப்பின் போது அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகஸ்தர்களினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகளுக்குரிய முறையான கொடுப்பனவுகள் இன்மை வைத்தியசாலைகளில் வைத்திய ஓய்வறை, கழிப்பிட வசதிகள் என்பன முறையாக இல்லாமை இடமாற்றம் செய்யப்பட்டு ஏனைய பிரதேசங்களில் சென்று தொழில் புரியும் வைத்தியர்களுக்கும் முறையான தங்குமிட வசதி போக்குவரத்து வசதி போன்றவை இல்லாமையினாலும் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

பயிற்சி பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த அரச வைத்திய அதிகாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றமைக்கு மிக முக்கிய காரணமாக மேல் குறிப்பிட்ட விடயங்கள் அமைந்திருந்தது என்றும் சுட்டிக்காட்டினர்.

விசேட மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாலும் ஏனைய சிலரை சர்வதேச பல்கலைக்கழகங்கள் உள்வாங்குவதினாலும் சுகாதாரத்துறை பாரியதொரு நெருக்கடி நிலையை சந்தித்துள்ளது. நாட்டில் அரச வைத்திய அதிகாரிகளுக்கு பாரியதொரு தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில் இத்தகைய பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து நாட்டினுடைய சுகாதாரத்துறையை மீள்கட்டி எழுப்புவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். அரச வைத்திய அதிகாரிகளின் முறையான சாதாரணமான வேண்டுகோள்களுக்கு அரசாங்கமும் செவி சாய்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் எடுத்துரைப்பதாகவும்  வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.