அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் வலியுறுத்தி, ஹட்டன் நகரில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே, இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் பிரேமரத்ன, உப செயலாளர் செல்வி ஆகியோரின் பங்குபற்றலுடன், ‘வாழ்வதற்கு வழிவிடு’ எனும் தலைப்பின்கீழ், மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
‘அரிசி, தேங்காய், பால்மா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதனால் மக்களுக்கு வாழ்க்கைச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் முறையற்ற உரக் கொள்கையால் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பால் எல்லா பொருட்ளின் விலைகளும் அதிகரித்துச்செல்கின்றன.
எனவே, பொருட்களின் விலைகளை குறைத்து, பெருந்தோட்ட மக்களுக்கு உரிய வகையில் சம்பளத்தை பெற்றுக்கொடுத்து, வாழ்வதற்கு வழிவிடு.’ என துண்டு பிரசுரம் ஊடாக, ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.