20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி வாகன எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் கருத்து தெரிவித்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, 20வதுதிருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற முயற்சிகளை முறியடிப்பதற்கு இன்றும் நாளையும் எதிர்கட்சி முயலும் என தெரிவித்துள்ளார்.
தனிநபர்களை அச்சுறுத்தி அரசாங்கம் 20வது திருத்தத்தினை நிறைவேற்ற முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பத்து உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு எதிரான போர்க்கொடி தூக்கினால் அரசாங்த்தின் முயற்சிகளை தோற்கடிப்பதற்கு அது போதுமானதாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முயன்றவர்கள் அனைவரும் தற்போது சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.