ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியும், வாக்களித்தும் இருக்கத்தக்கதாக, கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து, வெள்ளிக்கிழமை செயலாளர் நிசாம் காரியப்பரின் பங்குபற்றுதலுடன் கூட்டமொன்றை நடத்தினார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தது தொடர்பில் நடந்த நீண்ட கலந்துரையாடலின் பின்னர், மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில் அவர்களது நிலைப்பாட்டிற்கான விளக்கத்தை அளிக்குமாறு கோரப்பட்டது.
இக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காஸிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபிஸ் நசீர் அஹ்மட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதற்காக கட்சியின் அதியுயர்பீடக் கூட்டத்தை இயன்றவரை விரைவில் கூட்டுமாறும் கட்சியின் தலைவர் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.