பொதுஜன பெருமுனவின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்துவரும் பின்னணியிலேயே இன்றைய கூட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொது ஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவின் கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையிலேயே பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று அவசரமாகக் கூட்டப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறும் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பொது ஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் 20 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.