மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் புதைபடிவ எரிபொருட்களின் பாவனையிலிருந்து விடுபடுவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.“மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்காக, தற்போது முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த திட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு மின்னேற்ற நிலையங்களைநிறுவவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பின்னர், பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக, முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்திய பிறகு, பேருந்துகளின் உரிமை அரசாங்கத்துக்கு கிடைக்கும். இதற்காக சீனா, கொரியா உட்பட உலகின் எந்த நாடும் விண்ணப்பிக்கலாம். இது ஒரு முதலீட்டு வாய்ப்பாகும்.2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் புதைபடிவ எரிபொருட்களின்பாவனையிலிருந்து விடுபடுவது தொடர்பில் சர்வதேச உடன்படிக்கையொன்று உள்ளது. கார்பன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாக்க இதில் முதலீடு செய்கிறார்கள். மின்சாரப் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு பெறுமதியைக் கொண்டு வருவதனால், அந்தப் பெறுமதிக்கு உலகின் பல்வேறு அமைப்புகள் அதிக விலை கொடுத்து வருகின்றன.மேலும், அரச நிறுவனங்களின் வருமானம் குறைவதைத் தடுக்க அனைத்து நிறுவனங்களையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். புகையிரதம் மற்றும் போக்குவரத்து சபை பேரூந்துகளில் டிக்கெட் வழங்கும் முறைக்குப் பதிலாக மின்னணு அட்டை முறையைக் கொண்டுவருவதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அட்டை அல்லது க்யூஆர் சிஸ்டம் மூலம் பணத்தைப் பயன்படுத்தாமல் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்தால், இந்த ஒவ்வொரு நிறுவனங்களின் வருமானத்தையும் குறைந்தது 50% சதவீதத்தினால் அதிகரிக்கலாம்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 04 வருடங்களுக்குப் பின்னர் துறைமுகத்திற்கு புகையிரதத் தண்டவாளங்கள் அடங்கிய கப்பல் ஒன்று வந்துள்ளது. கொழும்பில் இருந்து பாணந்துறை வரையிலான புகையிரதப் பாதைகள் பழுதடைந்துள்ளன. குறைந்தபட்சம் 05 வருடங்களுக்கு ஒருமுறை கரையோரப் புகையிரதப் பாதைகள் மாற்றப்பட வேண்டும். தண்டவாளங்கள் விரைவாக பழுதடைவதன் காரணமாக புகையிரதத்தின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே கொழும்பில் இருந்து பாணந்துறை வரையிலான புகையிரதப் பாதையை நவீனமயமாக்கும் பணிகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.சமிக்ஞைக் கட்டமைப்பை நவீனமயமயப்படுத்த இந்திய அரசின் கடன் உதவியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. களனி மிட்டியாவத்த புகையிரதப் பாதையில் குறைந்த வேகத்துடன் பயணிப்பதற்குப் பதிலாக வேகத்தை அதிகரிக்கும் புனரமைப்பு நடவடிக்கைகள் இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.வெளிநாட்டில் இருந்து புகையிரதப் பெட்டியொன்றை இறக்குமதி செய்வதற்கு 200 மில்லியன் ரூபாய் செலவாகும். இலங்கை தொழில் முயற்சியாளர் ஒருவரினால் 25 மில்லியன் ரூபா செலவில் புகையிரதப் பெட்டிகள் பழுதுபார்க்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக தற்போதுள்ள புகையிரதப் பெட்டிகளை பழுதுபார்க்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.