வீட்டில் இருப்பவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத விடத்திலும் திடீர் கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சாதாரண நோய் அறிகுறிகள் ஏற்பட்டாலும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், பொதுமக்களுக்கு, அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் 3 ஆவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 61 பேர் மரணமடைந்துள்ளதோடு, மொத்தம் 86 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 121 பேர் தொற்றாளர்களாக ,னங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, அவதானத்துக்குரிய வலயங்களாக மட்டக்களப்பு, தெஹியத்தக்கண்டி, திருகோணமலை, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய 05 வைத்தியதிகாரி பிரிவுகள் இவ்வாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிக அவதானமாக ,ருக்குமாறு கேட்டுள்ளார்.
திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2,248 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,564 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,574 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,226 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 6,612 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.