வசாவிளான் – பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.சில பாதிகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும்,மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த வீதியானது பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதி என்பதோடு, இன்று (10) காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விசேட நிபந்தனைகள் இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த வீதி காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதக்கப்படும்.
குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுவது சட்டரீதியான குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.