75 நிமிடங்கள் கடலில் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு!

0
190

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், இரு கைகளிலும், இந்திய தேசிய கொடியை ஏந்தி, பாக் ஜலசந்தி கடலில், ஜல யோகா செய்து, தொடர்ந்து 75 நிமிடங்கள் மிதந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா, எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே உள்ள, படகு இல்லம் அமைந்துள்ள பாக் ஜலசந்தி கடலில், சுமார் 10 அடி ஆழத்தில் மிதந்த படியே, இராமேஸ்வரம் அடுத்த மெய்யம் புலி மீனவ கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுடலை என்பவர், இரு கைகளிலும் தேசிய கொடியை ஏந்தி, ஜல யோகா செய்து, 75 ஆவது சுதந்திர தினம் என்பதால், தொடர்ந்து 75 நிமிடங்கள் மிதந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இரு கைகளில், தேசிய கொடியுடன் கடலில் மிதந்தவாறு யோகாவில் ஈடுபட்ட இவரது முயற்சியை, அப்பகுதி மக்களும், மீனவர்களும் உற்சாகபடுத்தி பாராட்டினர்.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக ஊடங்களில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும், இன்று முதல் 15 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும், தேசிய கொடி ஏற்றுமாறும், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், இன்று, கடலில் 75 நிமிடங்கள் தொடர்ந்து மிதந்து, விழப்புணர்வை ஏற்படுத்தியதுடன், நாட்டு மக்கள் இடையே, ஒற்றுமை உணர்வு வளர வேண்டும் என வலியுறுத்துவதாகவும், சமூக ஆர்வலர் சுடலை குறிப்பிட்டார்.