மட்டு.ஒள்ளிக்குளம் பிரதேசத்தில் புதையல்
தோண்டிய நால்வர் கைது

0
205

மட்டக்களப்பு மண்முனைப் பற்று ஒள்ளிக்குளம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய 4பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மண்முனை ஒள்ளிக்குளம் நரசிமர வைரன் இந்து ஆலயத்துக்கு பின்னால் புதையல் தோண்டுவதாக களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து ஐ.பி.தென்னக்கோன் தலைமையிலான விஷேட அதிரடிப் படையினர் குறித்த இடத்தில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களில் நான்கு பேரை கைது செய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்திய சில உபகரணங்களையும் கைப் பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் உட்பட அம்பாரை மட்டக்களப்பு. தாழங்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இன்னும் சிலர் தப்பியோடி விட்டதாகவும் பொலி;ஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் ஆஜர்செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க நீதிவான் பீட்டர் போல் உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபர்கள் புதையல் தோண்டிய குறித்த இடத்தை முழுமையாக தோண்டி பார்ப்பதற்கு பொலிசார் நீதிமன்றில் அனுமதி கோரினர் இதை யடுத்து குறித்த இடத்தை தோண்டுவதற்கு பொலிசாருக்கு நீதவானினால் அனுமதி வழங்கப்பட்டது

இதை யடுத்து இன்று புதன்கிழமை குறித்த இடம் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலீசார் முன்னிலையில் பெக்கோ இயந்திரத்தினால் தோண்டப்பட்ட போது அங்கு சந்தேகத்திற்கு இடமான எந்த புதையல்களும் காணப்படவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.