வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களையும் மாகாணத்திற்கு வெளியே அனுப்பும் தீர்மானத்தை டிசம்பர் வரை ஒத்தி வைக்குமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடக்கின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராயா 2022-07-26 ஆம் திகதி கடிதம் வழங்கியதைக் கண்டுத்து ஜனாதிபதியின் செயலாளருக்கு அவசர கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில்நந்தனன் ஆகியோருடன் விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகிய மூவரையும் ஜீவன் தியாகராயா தூக்கியெறிந்தமை ஓர் தவறான முன்னுதாரணம் எனவும் குறிப்பாக நிர்வாக நடைமுறைக்கு முரணாக மேற்கொண்ட இந்த விடுவிப்பு உத்தரவுகளை உடன் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அவசர கடிதம் அனுப்பி வைத்தனர்.
ஒரேதடவையில் அதிக அதிகாரிகளை மாகாணத்திற்கு வெளியே அனுப்புவது மாகாணத்தின் பணியை பாதிக்கும் செயல் என்பதோடு ஏனைய அதிகாரிகளையும் மனதளவில் பாதிக்கும் செயலாகவும் அமையும் அத்தோடு நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களை இடமாற்றம், விடுவிப்பு என்பன தொடர்பில் ஆளுநர் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்க மட்டுமே முடியுமே அன்றி நேரடியாக இடமாற்ற உத்தரவு கடிதம் வழங்க முடியாது என்பதனையும் கருத்தில்கொள்ளுமாறு தொலைபேசியிலும், எழுத்திலும் முறையிடப்பட்டது.
இவற்றை உடன் கவனத்தில் எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்திருந்த நிலைமையில் நேற்று இரவு இந்த உத்தரவு தொலைபேசியில் வழங்கப்பட்டதோடு இந்த உத்தரவு இன்று வடக்கின்
ஆளுநர் ஜீவன் தியாகராயாவாவிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதறகமைய கடந்த ஒரு வாரமாக நீடித்த நிர்வாகச் சர்ச்சைக்கு ஓர் இடைக்கால தீர்வு எட்டப்பட்டுள்ளதோடு விரைவில் ஓர் மாறுபட்ட நிரந்தர தீர்விற்கும் முயற்சிக்கப்படுகின்றது.