மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால், மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனையடுத்து அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது. பின்னர் பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண்ணை அகற்றி ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரமும் சரிந்து விழுந்துள்ளது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.
இந்த மண்சரிவு காரணமாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


