அரச கட்டமைப்புடன் இணைந்து
செயற்படுவது குறித்து கலந்துரையாடல்

0
138

அரச கட்டமைப்பானது பல்கலைக்கழகங்களுடன் சிறப்பான உயர்தர உறவை வைத்திருக்கும்போது அனைவரும் காலத்துக்கேற்ற நன்மைகளை பெறலாம் என்பதன் அடிப்படையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்குமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் முத்துபண்டா உட்பட உயர்மட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சபையும் கிழக்குப்பல்கலைக்கழகமும் ஓர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் பல்கலைக்கழகம் மாகாணசபை இணைந்த உயர் மட்ட ஆலோசனை குழு ஒன்றை அமைப்பது பற்றியும் பயிற்சி பட்டறை ஒன்றின் சாத்தியப்பாடு பற்றியும் குறிப்பிடடார்.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் ‘சமூக நல்லிணக்க’ பிரிவை திறந்துவைத்ததுடன் இப்பிரிவின் பணிகளிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து கரடியனாறு விவசாய பயிற்சி கல்லூரிக்கு விவசாய பீட பீடாதிபதி சகிதம் களவிஜயம் மேற்கொண்ட ஆளுநர், அரச நிறுவனமான பயிற்சிக்கல்லூரியும் பல்கலைக்கலைக்கழகமும் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்வது குறித்தும் எதிர்காலத்தில் இணைந்த கள ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக பதிவாளர் நிதியாளர் பீடாதிபதிகள் இயக்குனர்கள் உதவி பதிவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.