கிளிநொச்சி புண்ணை நீராவி பகுதியில் தமது குழந்தைகளுக்கான போசாக்கு உணவை வழங்குமாறு கோரி, பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புன்னை நீராவி பகுதியில் இயங்கி வரும் திருச்சபை ஒன்றின் ஊடாக குறித்த பிரதேசத்தில் உள்ள 334 சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருவதுடன், மாலை நேர கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில், குறித்த திருச்சபையில் இடம்பெற்ற நிர்வாக சிக்கல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மாலை நேர கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்குகின்ற செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திருச்சபை ஊடாக 334 சிறுவர்கள் மாலை நேர கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன், இதில் 81 சிறுவர்கள் போசாக்கு குறைவானவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த போசாக்கு உணவு நிறுத்தப்பட்டதனால், அவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.