நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள, மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கேள்விப்பத்திர அடிப்படையில், தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க, நகர சபையினால், இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை, தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளுர் மற்றும் வெளி மாவட்ட வர்த்தகர்களிடம், மன்னார் நகர சபையினால், வியாபார நிலையங்களை பெற்றுக்கொள்ள, கேள்விப்பத்திர அடிப்படையில் விண்ணப்பம் கோரப்பட்டது.
அதற்கமைவாக, வியாபார நிலையங்களைப் பெற்றுக்கொள்ள, நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் விண்ணப்பித்திருந்தனர். அந்தவகையில், இன்று காலை 10.00 மணியளவில், மன்னார் நகர சபை மண்டபத்தில், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், மன்னார் நகர சபை செயலாளர், நகர சபையின் உறுப்பினர்கள், பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, ஒரு வியாபார நிலையத்தை பெற்றுக்கொள்ள, ஆகக்கூடிய கேள்வித் தொகைக்கு விண்ணப்பித்த வர்த்தகருக்கு, வியாபார நிலையம் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது, விண்ணப்பித்திருந்த நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் வருகை தந்திருந்தனர்.
பண்டிகைக் காலத்திற்கான தற்காலிக இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்கள், தமது வர்த்தக நிலையங்களை அமைத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
வியாபார நிலையங்களை பெற்றுக்கொள்வோர், பிரிதொரு நபருக்கு, வியாபார நிலைய இடங்களைக் கைமாற்றும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன், குறித்த இடம், நகர சபையினால் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என, மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குறிப்பிட்டுள்ளார்.
Home வடக்கு செய்திகள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க, இடம் ஒதுக்கீடு