ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி உட்பட ஐவர் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு- நஷ்டஈடு செலுத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

0
275

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் 2019 ஆம் ஆண்டு உளவுத்துறை தகவல் பெற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனூடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 21 தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி 12 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கத்தோலிக்க அருட்தந்தையர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழுவர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதற்குப் பொறுப்புடையவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன, 75 மில்லியன் ரூபாவையும்,
முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, 75 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, 50 மில்லியன் ரூபாவையும், முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், 10 மில்லியன் ரூபாவையும் இழப்பீடாக செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கம், குறித்த இழப்பீட்டுத் தொகையை அறவிட்டு, குண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களுக்காக, தலா ஒரு மில்லியன் ரூபா வீதம், அவர்களின் உறவுகளுக்கு வழங்க வேண்டும்.
அத்துடன், காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்தனவுக்கு, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.