ஆட்சியாளர்களின் கனவு மெய்ப்படவும் அவர்களது சுகபோக வாழ்க்கைக்காவும் தன்மை அர்ப்பணிக்கும் தரப்பினராகவே நாட்டுமக்கள் உள்ளனர் என்று ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது கனவை நனவாக்குவதற்காக மக்களது பணத்தில் 200 மில்லியன் செலவில் சுதந்திர தினத்தை நடத்தியுள்ளார்.
கடலை நோக்கி பீரங்கி வேட்டுக்களை செலுத்தினார்கள்.
வானை விமானப்படையின் விமானங்கள் அலங்கரித்தன.
இந்த நிகழ்வினூடாக மக்களாகிய எமக்கு புண்ணியம் வந்து சேர்ந்தது.
இவ்வாறு நாட்டின் தலைவர்களின் ஆசைக்காகவும் கனவுகளுக்காகவும் தம்மை அர்ப்பணித்து புண்ணியம் தேடிக்கொள்ளும் தரப்பினராக நாட்டு மக்கள் உள்ளனர்.
மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ள முடியாமல் பாதிப்புற்றுள்ள தரப்பினராக மக்கள் உள்ளனர்.
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாமல் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வேளை உணவை பாடசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அதிகம் கொண்ட இந்த நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த நாட்டில் 200 மில்லியன் ரூபாய் செலவில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
எனினும் கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ள உள்ளார்ந்த அச்சம் என்னவென்பதையும் நாம் அவதானித்தோம்.
படைவீரரின் வாளுக்கு ஜனாதிபதி அஞ்சியதை சுதந்திர தினத்தன்று காண முடிந்தது.
நாட்டை கொள்ளையடித்தவர்கள், நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அச்சத்துடனேயே வாழ வேண்டும்.