

இலங்கைக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அடிக்கட்டு உரம் இன்று மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அடிக்கட்டு உரம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்தில் மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
நீர்ப்பாசன நீர் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 22 கிலோ உரமும், மழையை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 10 கிலோ உரமும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்டத்திற்கு ஆயிரத்து 244.9 மெற்றிக் தொன் அடிக்கட்டு உரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உரம் 17 ஆயிரத்து 868 விவசாயிகளுக்கு, 21 ஆயிரத்து 621 கெக்டெயர் விவசாய செய்கையை மேற்கொள்ள பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக உயிலங்குளம் கமநல சேவை நிலைய பதிவை கொண்ட விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விவசாயிகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் தமது உரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின்குமார் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.