உடைபந்தாட்ட சுற்றுப் போட்டி

0
208

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு இடையில் உதைபந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

முன்னாள் கணித பேராசான் இரத்தினசபாபதி நினைவாக உடைபந்தாட்ட போட்டி இரு பாடசாலை மாணவ அணிகளுக்கிடையில் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன் தலைமையில் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்காக இடம்பெற்ற போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி ஹாட்லிக் கல்லூரிக்கு எதிராக 06 கோல்களை பெற்று வெற்றியை தமதாக்கியது.

தொடர்ந்து 20 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

இதில் நெல்லியடி மத்திய கல்லூரி மூன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேவேளை ஹாட்லிக் கல்லூரி, மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில் ஆசிரியர்களுக்கான போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியும், பழைய மாணவர்களுக்கான போட்டியில் ஹாட்லிக் கல்லூரியும் வெற்றியீட்டின.

இந்நிலையில் கணித பேராசான் இரத்தினசபாபதி நினைவு கேடயத்தை நெல்லியடி மத்திய கல்லூரி தமதாக்கிக்கொண்டது.

இரத்தினசபாபதி ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் ஹாட்லிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பொறியியல் பிரிவில் தெரிவாகியிருந்த சூழலிலேயே அரசால் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது.

இப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.

இவ்விளையாட்டு நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராசா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் வு.கலைச்செல்வன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் பு.கிருஸ்ணகுமார், வடமராட்சி வலயகல்வி பணிப்பாளர் சத்தியபாலன், நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் மருத்துவ கலாநிதி வே.கமலநாதன், ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர், நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்னாளர் அதிபர்கள், ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.