திருகோணமலையில் சுட்டு படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் வ.விக்னேஸ்வரனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், மாமனிதர் விக்கினேஸ்வரனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு மாமனிதரின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி காலை வங்கிக்கு கடமைக்காக சென்று கொண்டிருந்த போது வங்கி நுழைவாயிலில் வைத்து ஆயுததாரிகளால் விக்கினேஸ்வரன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் தேவாலயம் ஒன்றில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது நாடாளுமன்ற இடத்திற்கு, மாமனிதர் விக்னேஸ்வரனின் பெயர் அன்றைய தினம் வெளியிடப்படவிருந்த நிலையிலேயே இவரும் திருகோணமலையில் உள்ள வங்கிக்கு முன் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








