தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நிறுவை, அளவைப் பிரிவின் உதவி அத்தியட்சகர் எஸ்.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேருந்து நிலையம், நெளுக்குளம், பசார் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 78 வர்த்தக நிலையங்கள் மீது இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வவுனியாவில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள், தனியார் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் என்பவற்றில் விசேட சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது நிறுத்தல் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா, நிறுத்தல் அளவைகள் சரியாக உள்ளனவா, பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறுத்தல் அளவைகள் சரியானவையா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதனை முறையாக செய்யாத 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





