தேசிய அரசாங்கம் தொடர்பில் மக்கள் ஆணையற்ற இந்த அரசாங்கத்துடன் நாம் எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட அறிவித்தலொன்றை விடுத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உண்மைகளை பொய்களாக்குவதற்கும், பொய்களை உண்மைகளாக்குவதற்கும் பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பணம் மற்றும் சிறப்புரிமைகளை இலக்காகக் கொண்டவர்கள் இதற்கு துணை நிற்கின்றனர். இவ்வாறானவர்களுடன் தேசிய அரசாங்கம் தொடர்பில் நான் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. எமது கட்சியும் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளவுமில்லை. பிரதமர் பதவி தொடர்பிலோ, அமைச்சுப்பதவிகள் தொடர்பிலோ தற்போதைய அரசாங்கத்துடன் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. போலிப் பிரசாரங்கள் ஊடாக மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. போலிப் பிரசாரங்களை ஊடகங்கள் ஊடாக முன்னெடுத்தமையின் காரணமாகவே பொய் வெற்றி பெற்று 2019இல் நாட்டை அழிப்பதற்கான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியுடன் நாம் ஒருபோதும் தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை. பதவிகளையும் ஏற்கப் போவதில்லை. பணத்திற்கு விலை போகும் அரசியல் சூதில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது. முடிந்தால் மிகக் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுக்கின்றேன். அவ்வாறில்லை எனில் நீங்கள் நிதி ஒதுக்க தயங்கும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலையாவது நடத்துங்கள். அதன் ஊடாக மக்கள் ஆணை யாரிடமுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை செய்யுமாயின் அவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். ஆனால் அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எந்தவொரு காரணத்திற்காகவும் தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு நாம் தயாராக இல்லை. மக்கள் ஆணைக்கு மாத்திரமே நாம் மதிப்பளிப்போம். அதுவரையில் இந்த அரசியல் சூது விளையாட்டுக்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
2000 இலட்சத்திற்கு விலை போகும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்மில் இல்லை’ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.