யாழ்ப்பாணம் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் மருத்துவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பங்குனித் திங்கள் தினமான கடந்த 10ஆம் திகதி புத்தூர் சந்தியில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டுள்ளனர். சத்தத்தைக் குறைக்குமாறு மருத்துவர் அங்கு சென்று கூறியிருந்த நிலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியதுடன், மருத்துவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனால், மருத்துவமனையின் சேவைகள் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.