‘பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கையாகும். இளைஞர் கோரிய மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இன்று கடமையை செய்தால் இன்னும் 25 வருடங்களில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும்’ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ‘இன்று இந்த சபையில் 500 புதிய இளம் உறுப்பினர்கள் இணைந்துகொண்டுள்ளனர். மேற்பார்வையாளர்களாக அன்றி பாராளுமன்ற குழுக்களில் உள்ள இளம் பிரதிநிதிகளாகவே இவர்கள் பங்கெடுத்துள்ளனர். உலகில் முதல் முறையாக இவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. பாராளுமன்ற குழுவிலும் அமெரிக்க செனட் குழுவிலும் காங்கிரஸ் குழுவிலும் அவர்களது சபை உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். ஆனால் நமது பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நிலையியற் கட்டளைகளில் மேற்கொண்ட திருத்தங்கள் காரணமாக இளம் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மேலதிகமாக உங்களது கருத்துகளும் உள்வாங்கப்படும். சபை அமர்வுகளும் விவாதங்களும் மட்டுமே பாராளுமன்றத்தின் பணிகளென பலரும் நினைக்கிறார்கள். இன்று அநேகமான பாராளுமன்றங்களில் குழுநிலைச் செயற்பாடுகள் மூலமே அதிகளவான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிதி வழங்கலை அனுமதித்தல், நிதியை ஈடுபடுத்தல், செலவிடுதல், சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கூட்டுத்தாபனங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்பார்வைக் குழுக்களின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் சபை அமர்வில் பங்கேற்றல் மற்றும் உரையாற்றுதல் ஆகியவற்றை தவிர்ந்த ஏனைய அனைத்து பணிகளிலும் நீங்கள் பங்கெடுக்க முடியும். இந்த திட்டம் பற்றி கூறியபோது இது சாத்தியப்படாத விடயம் என சிலர் கூறினர். சிலர் இதனால் பயனில்லை நேரம் மட்டுமே வீணாகும் என்றனர். சிலருக்கு திட்டம் எவ்வாறானது என்பதே பெரும் குழப்பமாயிருந்தது. இருப்பினும் சிலர் அச்சமின்றி தங்களது பெயர்களை அனுப்பி வைத்தனர். அவர்களிலிருந்தே சிறந்த 535 பேரை நாம் தெரிவு செய்துள்ளோம். நீங்கள் சாத்தியமாக்கிக் காட்டுங்கள். நீங்கள் சாத்தியமாக்கிக் காட்டிய பின்னர் மற்றையவர்களும் இந்த பணியில் பங்கெடுப்பர். முதற் தடவையாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கொண்டு முழுமையாக பயனடைய வேண்டும். இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நாம் பொதுநலவாய குழுவினருக்கும் அறிவித்து அவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடியும். சர்வதேச பாராளுமன்ற சங்கத்தினருக்கு அறிவித்து அவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடியும். ஐரோப்பிய பாராளுமன்றம் இதுபற்றிய விஷேட அவதானத்தைச் செலுத்தும். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவின் உதவியையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அந்த பொறுப்புகள் உங்களையே சார்ந்துள்ளது. பாராளுமன்றத்தின் இளம் பிரதிநிதிகளும் எம்.பிக்களும் இணைந்து இந்த பணிகளை செய்யுங்கள். நாம் அபிவிருத்து அடைந்துவரும் நாடாகவே இருக்க முடியாது. எவ்வாறு நாம் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவது என்பதை சிந்திக்க வேண்டும். எமக்கு நல்லதொரு எதிர்காலம் தேவைப்படுகிறது. அதற்காக நல்லதொரு பொருளாதாரமும் அவசியமாகியது. சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அது பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள். கரு ஜயசூரிய அவர்களினால் மக்கள் சபைச் சட்டம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. அதன்கீழ் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் சபையொன்று உருவாக்கப்படும். அதனிலும் பங்கெடுக்க இளையோருக்கு வாய்ப்பளிக்கப்படும். பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்காக கிராம மட்டத்திலுள்ள அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தேசிய இளைஞர் மன்றத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அந்த மாற்றங்களைக் காண இன்னும் பல நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலமைப்புக்கு அமையவே செயற்றிட்டங்களை மாற்ற வேண்டும். அடுத்த பாராளுமன்றம் வரும் வரையில் பார்த்துக்கொண்டிருக்காமல் உங்கள் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சவாலை நாம் ஏற்றுக்கொண்டு நல்ல தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.
25 வருடங்களின் பின்னர் ‘நாம் மேற்கொண்ட தீர்மானங்களே இலங்கையின் அபிவிருத்திக்கு வழிவகுத்தன’ என்று நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.