இனவாதத்தை விதைத்துவரும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் இன்று காலை ஒரு மணிநேரம், நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து, அடையாள கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.





சரத் வீரசேகர, கடந்த 22ஆம் திகதி, முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டிற்கு தடையேற்படுத்தாதே, சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள், நீதிபதிகளின் கட்டளைகளுக்கு மதிப்பளி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டக்கார்கள் ஏந்தியிருந்தனர்.

