அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசித்துவரும் நிலையில், ஒக்டோபர் மாதம் இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜியா மாகாணத்தில் இந்து – அமெரிக்க சமூக மக்கள் அதிகளவில் வசித்துவருவதுடன் அவர்கள் மாகாண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கவனத்திற்கொண்டு, ஜோர்ஜியாவில் ஒக்டோபர் மாதத்தினை இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோர்ஜியா மாகாண ஆளுநர் பிரையன் கெம்ப் வெளியிட்ட அறிவிப்பில், இந்து பாரம்பரியம், கலாசாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆகியன அவற்றை பின்பற்றுவோருக்கு, வாழ்வின் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குவதாகவும் வழிகாட்டுதலுக்காக இந்துமத போதனைகளை தேடிப்பார்க்கும் கோடிக்கணக்கான தனிநபர்களுக்கு ஊக்கம், பிரதிபலிப்பு மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றிற்கான ஒரு வளமாகவும் அவை சேவையாற்றுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் 100 கோடி பக்தர்களுடன் மற்றும் அமெரிக்காவில் தோராய அடிப்படையில் 30 இலட்சம் பேருடன் 3வது மிகப்பெரிய மதமாக இந்துமதம் உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.