மனித – யானை மோதல் – 5 வருடங்களில் 618 மனித உயிரிழப்புகள் ; 1,867 யானைகளும் இறப்பு

0
156

நாட்டில் கடந்த 5 வருடங்களில் மனித-யானை மோதலால் 618 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளளதுடன், 1,867 யானைகளும் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் கடந்த 2022 ஆம் வெளியிடப்பட்ட வருடாந்த தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனித – யானை மோதலினை கட்டுப்படுத்த கடந்த இரண்டு வருடங்களில் (2021/ 2022)  நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மின்சார வேலிகள் அமைப்பது மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக மாத்திரம் 228 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும், மனித – யானை மோதல் காரணமாக கடந்த 5 வருடங்களில் 1,867 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 618 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களில் பாதுகாப்பு மின்சார வேலிகளை அமைப்பதற்காக 125 கோடியே 10 இலட்சத்து 67 ஆயிரத்து நூற்றி இருபத்திதொன்பது ரூபாய் (1,251, 067, 129) செலவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இவற்றின் பராமரிப்பு செலவுகளுக்காக 103 கோடியே 17 இலட்சத்து 41 ஆயிரத்து 440  (1,031, 741 ,420) ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதுவரை நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 756 கிலோ மீட்டர் வரையிலான மின்சார வேலிகளே அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 5 வருடங்களுக்குள் 2022 ஆண்டிலேயே மனித-யானை மோதலால் யானைகளின் மரணம் மனித மரணங்கள் உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது. அதற்கமைவாக கடந்த வருடத்துக்குள் மாத்திரம் 494 யானை மனித உயிரிழப்புகளும் 7 ஆயிரத்து 830 சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.