பெய்ஜிங்
சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், “தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (the Chinese Center for Disease Control and Prevention) மற்றும் பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றை தொடர்பு கொண்டு விசாரித்தது. அப்போது அவர்கள், ”பெய்ஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் அசாதாரணமான அல்லது புதிய நோய்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஏற்கனவே அறியப்பட்ட நோய்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்களின் பொதுவான அதிகரிப்புதான்” என்று தெரிவித்ததாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேலும், “சீனாவின் தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அதோடு தடுப்பூசிகள், நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது மற்றும் முக கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
நடந்தது என்ன?
சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்படி அந்நாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஊடகச் செய்திகளின்படி சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு அதிகரித்துள்ளது. குழந்தைகள் அனைவருமே சுவாசக் கோளாறுடனேயே அழைத்துவரப்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக நவம்பர் 12-ல் சீன தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அதில், “கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் எதிரொலியாகவே இந்தப் புதிய தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் SARS-CoV-2 வைரஸ் (கோவிட் தொற்று) பரவல், இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், இன்னும் பிற தொற்றுகள் ஆகியனவற்றின் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம், சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. குழந்தைகளைப் பாதிக்கும் RSV வைரஸ், மைகோப்ளாஸ்மா நிமோனியா ஆகியனவற்றைப் பற்றியும் அறிக்கை கோரியது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் பரவிய கோவிட்-19 தொற்று உலகையே ஆட்டிப் படைத்தது கவனிக்கத்தக்கது.