நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழையுடனான காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் பாதிப்படைந்துள்ளது.



குறிப்பாக இரணைமடு குளத்தின் தாழ் நிலப்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான கண்டாவளை, தர்மபுரம், பிரமந்தனாறு, முரசுமோட்டை, புன்னைநீராவி, பெரியகுளம், குமரபுரம், ஊரியான், உமையள்புரம், பரந்தன், புளியம்பொக்கணை பகுதிகளில் பாரியளவில் வெள்ளநீர் வீடுகளிற்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




04 நலன்புரி நிலையங்களில் நாகேந்திரபுரம் மகாவித்தியாலயம், முரசுமோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகிய இடங்களை இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.



இந்நிலையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இடங்களில் ஆயிரத்து 364 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களை சேர்ந்த 263 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 707 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 214 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.