அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி இரண்டாவது
நாளாக இன்றைய தினமும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவனொருவர் மரதனோட்ட நிகழ்வில் மயங்கி வீழ்ந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் உயிரிழந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அறிந்த பிரதேச மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த திங்கட் கிழமை, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, வைத்தியசாலையின் பெயர்ப்பலகைகள் அடித்துச் சேதமாக்கப்பட்டதோடு,வைத்தியசாலை மீது கல்லெறித் தாக்குதலும் நடாத்தப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தமது பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துவதாகத் தெரிவித்து, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, வைத்தியவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருகை தருவோர் வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை
நோக்கிச் செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.